ஜார்க்கண்ட் மாநிலம் வியோகர் என்ற இடத்தில் ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலியான நிலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரோப் காரில் சிக்கி கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட நபர்களை மீட்பு படையினர் போராடி மீட்டுள்ளனர்.
திரிகூடம் என்ற இடத்தில் இரண்டு மலைகளுக்கிடையே சுற்றுலாப் பயணிகளுக்காக ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ரோப் காரில் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை இரண்டு ரோப் கார்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதனால் மற்றவர்கள் சென்ற ரோப்கார் ஆங்காங்கே தொங்கியபடி அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர். தகவலறிந்து விமான படையினர், தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை 30 பேரை மீட்டதாகவும், இன்னும் 18 பேரை மீட்க வேண்டி உள்ளதாகவும் அம்மாநில அமைச்சர் அவசுல் ஹசன் அறிவித்திருந்தார். ரோப்கார்கள் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்துக்குக் காரணம் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.