திரிபுரா முதல்வர் தலைக்கு ரூ.5.5 லட்சம் சன்மானம்!: முகநூல் பத்வாவால் பரபரப்பு
திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் தலைக்கு, ரூ.5.5 லட்சம் கொடுக்கப்படும் என பத்வா விதிக்கப்பட்ட முகநூல் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையவரைக் கைதுசெய்ய தனிப்படை போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த முகநூல் பதிவின் மீது விசாரணை நடத்த மேற்கு அகர்தலா காவல்நிலையத்தின் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், சைபர் கிரைம் குற்றத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் நிபுணர்களின் உதவியையும் காவல்துறையினர் நாடியுள்ளனர்.
இதற்கு முன்னர் முதல்வர் மாணிக் சர்க்காரின் பெயரில் இயங்கிவந்த போலியான முகநூல் பக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உபயோகிப்பவர் இந்தூரைச் சேர்ந்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதல்வரின் தலைக்கு பத்வா விதித்த முகநூல் பக்கம் ரியா ராய் என்ற பெயரில் இயங்கிவந்துள்ளது. வேறெந்த கூடுதல் தகவல்களும் அதில் கொடுக்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் ஆகலாம். ஆனால், கண்டிப்பாக பிடித்துவிடலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக் சர்க்கார் சுதந்திர தினத்தன்று இந்தியாவில் சகிப்புத்தன்மை, ஜனநாயகம் கேள்விக்குறியாக இருப்பது குறித்து உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்