3 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒரு காக்கை குஞ்சின் இறப்புக்கு காரணமான கிராமவாசி ஒருவர் மீது காக்கைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மத்தியபிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தின் சுமேலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா கேவத். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து காக்கைகளில் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றாலே காக்கைகள் இவரை வட்டமிட ஆரம்பித்துவிடுமாம். எனவே வெளியே கிளம்பினாலே குச்சியுடன்தான் செல்வார் என்கின்றனர் அக்கிராம மக்கள்.
3 ஆண்டுகளுக்கு முன் வலையில் சிக்கிய காக்கை குஞ்சு ஒன்றை சிவா காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது இவரின் கையில் இருந்த போது அந்த குஞ்சு இறந்துவிட்டது. இதனைக்கண்ட அங்கிருந்த காக்கைகள் இவர்தான் அந்த காக்கை குஞ்சின் இறப்புக்கு காரணம் என நினைத்து தாக்க ஆரம்பித்துள்ளன.
அப்போதிலிருந்து இவரை காக்கைகள் தாக்குவது வாடிக்கையாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் காக்கைகள் இவரை துரத்துவதையும், இவர் தப்பிப்பதையும் அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பறவைகள் ஆய்வாளர்கள், ''காக்கைகள் மனிதர்களை நினைவில் வைத்திருக்கும் அறிவுத்திறன் கொண்டவை. அதனிடம் தவறாக நடந்துகொண்டால் நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கும் திறன் கொண்டவை’’ எனத் தெரிவித்துள்ளனர்.