டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நேற்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. இதில் 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதில் பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன் தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை துறை, பால்வளத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார்.
கல்வி உட்பட அனைத்திலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ பணியாற்றுவேன் என எல். முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழக மக்களுக்காக, தமிழர்கள் நலனுக்காக, தமிழ் பண்பாட்டுக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக, தமிழர்களுடைய முன்னேற்றத்திற்காக எனக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பொறுப்பல்ல, பணி. தமிழ்நாடு ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்துகொண்டிருக்கிறது. இன்னும் தமிழகத்தினுடைய மேம்பாடு, வளர்ச்சி, கல்வி என தமிழகம் எல்லாவற்றிலும் முதன்மை மாநிலமாக வர வேண்டும். அதற்காக பணியாற்றுவேன்'' என்றார்.