பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட சூழலில், அதற்கு முன்னர் புதிதாக அறிவிக்கப்பட்ட பாஜக மாநில பொறுப்பாளர்களுடன் நாளை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை அண்மையில் பாஜக நியமித்தது. அதன்படி, மேற்குவங்க பொறுப்பாளராக கைலாஷ் விஜய் வர்கியா நியமிக்கப்பட்டார். அவருக்கு அர்விந்த மேனனும், பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியாவும் துணையாகச் செயல்படவுள்ளனர். அதேபோல அசாம் மாநிலத்திற்குக் கட்சியின் துணை தலைவர் பைஜயந்த் பாண்டாவும், கேரள மாநில பாஜக பொறுப்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனும், தமிழக பொறுப்பாளராக பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலில், புதிய பொறுப்பாளர்களுடன் நாளை காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நட்டா நடத்தவுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள இந்த மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.