ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் "என் சொந்தக் காரணமாக என் பதவியை ராஜினாமா செய்கிறேன், மேலும் என்னுடன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக பொறுப்பேற்றார்.
உர்ஜித் படேல் அவர்களின் இந்த ராஜினாமா முடிவை அடுத்து இது தொடர்பாக பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் ''உர்ஜித் படேலின் இந்த முடிவு வங்கித்துறைக்கு பெரும் இழப்பு. அவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்'' என கூறியுள்ளார்.
நாட்டுக்காக உர்ஜித் படேல் சேவையாற்றியதை மத்திய அரசு பாராட்டுகிறது. உர்ஜித் மேலும் பல ஆண்டுகள் பொதுசேவையாற்ற வாழ்த்துகிறேன் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லீ தெரிவித்துள்ளார்.
உர்ஜித்தின் இந்த ராஜினாமா முடிவு வியப்பளித்துள்ளது. அவரை நாம் இழக்கிறோம் என ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணியசாமி, உர்ஜித் படேலின் இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு பதகமாக அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
உர்ஜித் படேலின் இந்த முடிவு வியப்பளிக்கவில்லை. மாறாக வருத்தமளிக்கிறது. தன்மானம் உள்ளவர்களும், அறிவார்ந்தவர்களும் இந்த அரசாங்கத்தில் வேலை செய்யமுடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.