உபி. சுற்றுலாத்தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்!
உலகின் ஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இது அம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளங்களுக்கான பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் சார்பில், அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இடம்பெறாதது மிகப்பெரிய விவாதத்திற்குள்ளாகி உள்ளது. தாஜ்மஹாலின் பராமரிப்பிற்கான நிதிப்பங்கீடுகள் குறித்தும் எந்தத் தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை.
ஆண்டொன்றுக்கு 60 லட்சம் சுற்றுலாப்பயணிகள் தாஜ்மஹாலைப் பார்க்க செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள். நாட்டின் அதிக வருவாய் தரும் சுற்றுலாத்தளமும் தாஜ்மஹால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் ஒரு பேட்டியின்போது, கீதையும், ராமாயணமும்தான் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றனவே தவிர, தாஜ்மஹால் அல்ல என தெரிவித்தார்.
யுனெஸ்கோவால் ‘உலக பாரம்பரிய சுற்றுலாத்தளம்’ எனப்பெயர் பெற்ற தாஜ்மஹால், அது இருக்கும் மாநிலத்திலேயே சுற்றுலாத்தளமாக அங்கீகரிக்கப்படாதது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்