இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், கரோனா சிகிச்சைக்கு முக்கிய மருந்தாக உள்ள ரெம்டெசிவிர் மருந்தின் விலையைக் குறைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெம்டெசிவிர் மருந்தின் விலை ஏறக்குறைய ரூபாய் 2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ரெம்டெசிவிர் மருந்து இனி ரூபாய் 899-க்கு விற்பனை செய்யப்படும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ஏழு நிறுவனங்கள் தயாரிக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு தொடர்பான பட்டியலும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ரெம்டெசிவிர் மருந்தின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.