Skip to main content

”அழைப்பின்றி பிரியாணி சாப்பிடச் செல்வதால் உறவுகள் மேம்படாது” - மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

narendra modi

 

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கணொளி வாயிலாக பஞ்சாபில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

 

அப்போது அவர், பிரதமர் தனது கண்ணியத்தை காக்க வேண்டும் என கூறியதோடு, மத்திய அரசு வெளியுறவுக்கொள்கையிலும் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது;

 

ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் தற்போதைய அரசாங்கம், தங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு சரி செய்யாமல், இன்னும் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவை குற்றஞ்சாட்டி வருகிறது.

 

பிரதமர் பதவிக்கு சிறப்பு முக்கியத்துவம் கொண்டது. தவறுகளை குறைத்துக்காட்ட வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும். நான் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, ​​எனது வேலையின் மூலம் பேசினேன். உலகத்தின் முன்னால், நாடு தனது மதிப்பை இழப்பதற்கு நான் அனுமதிக்கவில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குலைக்கவில்லை.

 

வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் அமர்ந்து நம்மை ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல்வாதிகளை கட்டிப்பிடிப்பதாலோ, அழைப்பின்றி பிரியாணி சாப்பிட செல்வதலோ (வெளிநாடுகளுடனான) உறவுகள் மேம்படாது. பாஜகவின் தேசியவாதம் பிரிட்டிஷாரின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அரசியலமைப்பு நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்படுகின்றன. நாங்கள்  ஒருபோதும் அரசியல் லாபங்களுக்காக நாட்டைப் பிரிக்கவில்லை. நாங்கள் ஒருபோதும் உண்மையை மறைக்க முயற்சிக்கவில்லை. நாட்டின் மதிப்பையோ, பிரதமர் பதவியையோ நாங்கள் ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. இன்று மக்கள் பிளவுபட்டுள்ளனர். இந்த அரசாங்கத்தின் போலி தேசியவாதம் வெத்துவேட்டானது, ஆபத்தானது. இவ்வாறு மன்மோகன் சிங் உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்