புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு செய்ய வேண்டும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘தெய்வத் தமிழ்ப் பேரவை’ சார்பாக தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றனர். அதனையொட்டி காராமணிக்குப்பத்தில் அமைந்துள்ள சுந்தர விநாயகர், சுப்பிரமணியர் ஆலயத்தில் தமிழில் அர்ச்சனை செய்யக் கேட்டனர். ஆனால் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்துவிட்டனர். அதையடுத்து சிவனடியார்களும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரும் முருகன் போற்றி மந்திரங்களை சொல்லச் சொல்ல பொதுமக்களும் பின்தொடர்ந்து பெருங்குரலெடுத்து போற்றி மந்திரங்களை கூறியதைக் கேட்டு பக்தர்கள் பரவசத்தோடு முருகனை வணங்கினர்.
இதுகுறித்து தெய்வத்தமிழ்ப் பேரவையினர் கூறுகையில், "தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லி கேட்கின்றவர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அதைப்போல புதுச்சேரியிலும் எங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தோம். அதுமட்டுமின்றி, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை கேட்கின்றவர்களுக்கு தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது என்று நாங்கள் சொல்லியும் மறுத்து விட்டார்கள்.
அதன்பிறகு சிவனடியார்களும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரும், முருகன் போற்றி மந்திரங்களை சொல்லச் சொல்ல பொதுமக்களும் பின்தொடர்ந்து பெருங்குரலெடுத்து போற்றி மந்திரங்களை கூறியதைக் கேட்டு பக்தர்கள் பரவசத்தோடு முருகனை வணங்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழ்நாடு அரசு போல புதுச்சேரி அரசும் தமிழில் அர்ச்சனை செய்வதற்கும், குடமுழுக்கு செய்வதற்கும் உரிய அரசாணை வெளியிட வேண்டும். அதை கோவில்களில் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை வைத்து தமிழ் வழிபாட்டை உறுதிப்படுத்த வேண்டும்" என்றனர்.
மேலும், ‘தமிழர்கள் கோவில்களுக்கு செல்லும்பொழுது தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்’ என கேட்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பாக பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாசு சந்திரபோசு தலைமை தாங்கினார். தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் விசயகணபதி, சிவனடியார்கள் சிவசங்கரன், இராசாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் தமிழ்த்தேசிய பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி, நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் இரமேஷ், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, தமிழன்பன், அசோக் ராசு, பாகூர் அன்பு நிலவன், மகளிர் ஆயம் சத்தியா, செல்வி, புவனா,பிரியா உள்ளிட்டவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.