2023 ஆம் ஆண்டில் தேர்தலை சந்திக்கவுள்ள திரிபுரா மாநிலத்தில், தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பிரத்யோத் கிஷோர் தெப்பர்மா கடந்த 2019 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி தனி கட்சி தொடங்கினார்.
இதனையடுத்து பிஜுஷ் பிஸ்வாஸ், திரிபுரா காங்கிரஸின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் பிஜுஷ் பிஸ்வாஸ், கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகியதோடு அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் திரிணாமூல் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சுஷ்மிதா தேவிற்கு பிஜுஷ் பிஸ்வாஸ் நெருக்கமானவர் என்பது கவனிக்கத்தக்கது. திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து திரிபுராவில் ஆட்சிமைக்க காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, பஞ்ச பாண்டவர் என்ற குழுவையும் அமைத்துள்ளார். மேலும் சில வாரங்களுக்கு முன்பு திரிபுராவை சேர்ந்த ஏழு காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.