இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறிவரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. தினமும் 50 முதல் 60 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இருந்தும் கரோனா முழுவதும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்று காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், ஒடிசா, சத்தீஸ்கரில் கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பழங்குடியினர் பயன்படுத்தும் சிவப்பு எறும்பு சட்னியை நாட்டிலுள்ள அனைவருக்கும் கொடுக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து எச்சரித்ததோடு அல்லாமல், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளது.