
துபாயிலிருந்து ரகசியமாக சென்னை வந்த பிரபல மலையாள நடிகர் சியாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பிரபல மலையாள நடிகர் சியாஸ் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த கண்ணூர் மாவட்ட சந்திரா நகர் காவல் நிலைய போலீஸார், சியாசை கைது செய்ய தேடி வந்தனர். ஆனால், போலீசாரை ஏமாற்றி விட்டு துபாய்க்கு தப்பிச் சென்றார் சியாஸ்.
இந்த நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதனையறிந்து, துபாயிலேயே தலைமறைவாகியிருந்த சியாஸ் சில மாதங்கள் கடந்த நிலையில், சுற்றுலா பயணி போல துபாயிலிருந்து மிக ரகசியமாக இன்று காலையில் சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார்.
இந்த விஷயம் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து ரகசியமாக கண்காணிக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சியாஸை சுற்றி வளைத்தனர் குடியுரிமை அதிகாரிகள். அவரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியபோது, ஒரு கட்டத்தில் தேடப்படும் நடிகர் சியாஸ் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மூலம், நடிகர் கைது செய்யப்பட்ட தகவல் கேரளா காவல்துறைக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சென்னை வரும் கேரளா போலீஸிடம் சியாஸ் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது. சென்னையில் நடிகர் சியாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.