இன்று நடந்த ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது.
இது கடந்த ஜூன் மாதம் 6.25 சதவீதமாக உயர்த்தியது. அதன் பின் ஆகஸ்ட் மாதம் 6.50 சதவீதமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நுகர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதனால் தற்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய நேரம் என்று தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.