புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாகக் கடந்த 2016ஆம் ஆண்டு புகார் எழுந்தது. அப்போது இது தொடர்பாகத் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய ஆளுநர் தடை விதித்தார். இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டன.
இதனையடுத்து புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அப்போது மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் எப்போது ரேஷன் கடைகள் திறக்கப்படும் என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. அதற்கு வரும் தீபாவளிக்கு முன்பாக ரேஷன்கடைகள் திறக்கப்பட்டு தீபாவளிக்காக இலவச அரிசி, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் இன்று (21.10.2024) ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
இதனையொட்டி தீபாவளிக்கான இலவச பத்து கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை ரேஷன் கடை மூலம் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று ரேஷன் கடைகளைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரையை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன் மூலம் புதுவையில் அரசு ஊழியர்கள், கவுரவ கார்டுதாரர்கள் நீங்கலாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.