![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/FvHx7BhDxdZrsh8iEAs2w8JMtOXLqNpjsEca78oF03w/1618030278/sites/default/files/inline-images/covidssa.jpg)
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட கரோனா பரவும் வேகம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 45,384 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 794 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ராவில் ஒரேநாளில் 59,000 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தின் மும்பை நகரில் மட்டும் ஒரே நாளில் 9,200 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 8,521 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 9,695 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா அதிகரிப்பால் டெல்லி அரசு, பள்ளிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.