வேளாண் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சூழலில், இந்தச் சட்டங்களுக்கு எதிரான வழக்கு நேற்று (12/01/2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நான்கு பேர் கொண்ட அந்த குழுவில், பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜித்தேந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் தன்வத் என்ற மகாராஷ்டிர விவசாயக் குழுத் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எப்படி நீதி கிடைக்கும் என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, "உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் நம்பகத்தன்மை குறித்து அரசின் வழக்கறிஞர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் வெளியிட முடியுமா. வரும் 15-ம் தேதி நடக்கும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றுப் பேச வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இந்தக் குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை யார் அளித்தது எனத் தெரியவில்லை. அவர்களின் பின்புலம் ஏன் ஆய்வு செய்யப்படவில்லை, அவர்களின் நிலைப்பாடு குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானார்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவானவர்கள். எவ்வாறு இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும். இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது. குழுவில் உள்ள அசோக் குலாட்டி, வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் கட்டுரையை எழுதியதோடு, எதிர்க்கட்சி விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகிறது எனவும் அவர் கூறினார். ஜோஷியும் அதே போல ஒரு கட்டுரையை எழுதினார். வேளாண் சட்டங்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச ஆதரவு விலையை அகற்றுவதையும் ஆதரித்தார். அனல் கன்வந்த் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, இந்தச் சட்டங்கள் நிதி சுதந்திரத்தைக் கொண்டு வரும் என்றும் கூறினார். அதேபோல, பூபிந்தர் சிங், விவசாய சட்டங்களை ஆதரிப்பதாக விவசாய அமைச்சருக்குக் கடிதம் எழுதியவர்.
தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகள், டெல்லி எல்லைகளில் கடந்த 49 நாட்களாகப் போராடி வருகிறார்கள். தங்கள் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் போராடி வருகிறார்கள், ஆனால், மோடி அரசு அகங்காரத்துடன் அதை கவனிக்கவில்லை. நுகர்வோருக்கு ஆதரவாக இருக்கும் தேசத்தின் தூண்களான உணவுப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதாரவிலை, உணவு பகிர்மான முறை, கொள்முதல் ஆகியவற்றை இந்தச் சட்டங்கள் சிதைத்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.