நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான இன்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது சிஏஏ, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அயோத்தி தீர்ப்பு ஆகியவை குறித்து பேசினார்.
அவரது இந்த உரையில், "பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துகின்றன என்பது எனது அரசாங்கத்தின் கருத்து. அதே நேரத்தில், எதிர்ப்பு என்ற பெயரில் செய்யப்படும் எந்தவொரு வன்முறையும் சமூகத்தையும், நாட்டையும் பலவீனப்படுத்தும். அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் போது நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த முதிர்ச்சியோடு நடந்துகொண்டது பாராட்டத்தக்கது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் அரசியலமைப்பின் 370 வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் சம வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. அதேபோல நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்தார். சிஏஏ குறித்த அவரின் பேச்சின் போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு பின்னர் அமைதியானது.