கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காகச் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா என்ற அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது. கோவில் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துவந்த இந்த அறக்கட்டளை, நேற்று கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, சிறப்புப் பூஜைகளுடன் நேற்று கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. புதன்கிழமை காலை தற்காலிக கோவிலில் சிலைகள் வைக்கப்படும் எனவும், பின்னர் புதிதாகக் கட்டப்பட உள்ள ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அங்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.