மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். அதுபோல, எதில் சந்தோஷம் கிடைக்கும்? எங்கு சென்றால் நிம்மதி கிடைக்கும்? என்பதிலும் சிலர் தெளிவாக உள்ளனர். குறிப்பிட்ட அந்த ஹோட்டல் சாப்பாடும் அதன் சுவையும் பலருக்கும் பிடிக்கும். ஆனால், அதே ஹோட்டலின் சாப்பாடு சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே, அந்த ஹோட்டலுக்குச் செல்லவே மாட்டார்கள். காரணம் – மனிதனுக்கு மனிதன் சிந்தனையிலும் நடவடிக்கையிலும் மாறுபட்டு இருப்பதுதான்.
ஒரே சூரியன்; ஒரே சந்திரன்; ஒரே உலகம் என்றிருந்தாலும் ஆன்மிக விஷயங்களிலும் மனிதர்கள் மாறுபட்டிருக்கின்றனர். இந்து மதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்களில், சைவம், வைணவம் என்ற பிரிவுகள் ஏற்கனவே உண்டு. அதெல்லாம், மேல்த்தட்டு மக்கள் சார்ந்தவை. எல்லா தெய்வங்களும் ஒன்றுதான். யாரை வணங்கினால் என்ன? என்று மேலோட்டமாக ஆன்மிகத்தை அணுகுபவர்களே அனேகம் பேர். வெகுசிலர், எந்த தெய்வமும் தேவையில்லை; வழிபடுவதற்கு குலதெய்வம் ஒன்றே போதும் என்ற மனநிலையில் உறுதியாக இருப்பர். சிலருக்கு, வருடத்திற்கு ஒருமுறையாவது குறிப்பிட்ட நாளில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தே ஆகவேண்டும். இல்லையென்றால், அந்த வருடம் முழுவதும் புலம்புவர். வெகுசிலரே ‘கட-உள்’ என நான் கடவுள் தத்துவத்தை (உனக்குள் கடவுள் – நீயே கடவுள் – நீயே சக்தி) உணர்ந்து கெட்டியாகப் பிடித்துள்ளனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உறுதியுடன் வாழ்வோரும் உண்டு. இவ்வாறு, ஆன்மிக ஈடுபாடு ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாகக் கட்டிப் போட்டிருக்கிறது.
சரி, ரஜினிகாந்த் விஷயத்துக்கு வருவோம்! அதே இமயமலைதான்.. அதே பாபாதான்.. அதே ரிஷிகேஷ்தான்.. அதே ஆசிரமம்தான். ஆனாலும், அங்கு சென்றுவருவதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் என்றால், ரிஷிகேஷில் பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அவ்வளவுதான். சில நேரங்களில், பக்தர்களே அவருடைய ரசிகர்களாகவும் இருக்கின்றனர். உத்தரகான்ட் – ரிஷிகேஷ் – தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு தற்போது சென்றுள்ள ரஜினியோடு பக்தர்கள் சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னை வரும்போதெல்லாம் தவறாமல் சந்தித்துவிடுவார் ரஜினி. கோவை – ஆனைகட்டி ஆசிரமத்துக்குச் சென்றும் சந்தித்திருக்கிறார். அங்கு சில நாட்கள் தங்கி அவருடைய உரையையும் கேட்டிருக்கிறார். தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இறந்தபோது ரஜினி தெரிவித்த இரங்கலில் "எங்களை ஆசீர்வதியுங்கள்; எப்போதும் எங்களுடன் இருங்கள்." என்று உருக்கத்தை வெளிப்படுத்தினார். அவரைத் தனது ஆன்மிக குரு என்றே சொல்லி வருபவர் ரஜினி. அதனாலோ என்னவோ, ரிஷிகேஷும் அங்குள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமும் ரஜினியை ஈர்த்த வண்ணம் உள்ளன.
முதலில் சினிமா, அடுத்து ஆன்மிகம், அதற்கடுத்து அரசியல் என ரஜினி சுழலும் வெவ்வேறு வட்டத்தில், ரசிகர்களும் சுழலப் பழகிவிட்டனர். அதனால்தான், ட்விட்டரில் ரஜினியின் ரிஷிகேஷ் விசிட்டையும் கொண்டாடுகின்றனர்.