எம்.எல்.ஏ.-க்களுக்காக குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்காகவே ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலை பா.ஜ.க. தள்ளிவைத்துள்ளது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்துவரும் சூழலில், மத்தியப்பிரதேசத்தைப் போல ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
ராஜஸ்தானிலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ள அசோக் கெலாட், "காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி பணம் கொடுத்து ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்கு முன்பணமாக ரூ.10 கோடியும், கட்சியில் சேர்ந்த பின் ரூ.15 கோடியும் தருவதாகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது" எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, 90-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனியார் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்த அசோக் கெலாட், பின்னர் அவர்களைத் தங்களது வீடுகளுக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநிலங்களவைத் தேர்தல் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.கவின் குதிரை பேரம் அப்போது முழுமையடையாததால் எந்தக் காரணமும் இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் உள்ளோம். எங்கள் எம்.எல்.ஏக்களின் ஒரு வாக்கு கூட மாநிலங்களவைத் தேர்தலில் வேறு யாருக்கும் செல்லாது. எங்கள் இரு வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். மேலும், இரண்டு சி.பி.ஐ.-எம்.எல்.ஏக்கள் தேர்தலில் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.