நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரிஜேந்திர சிங் ஆவார். இவர் நேற்று (10.03.2024) பா.ஜ.க.வில் இருந்து விலகினார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், சுரு தொகுதி பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “என் குடும்ப உறுப்பினர்களே, உங்கள் அனைவரின் உணர்வுகளுக்கு இணங்க, பொது வாழ்வில் ஒரு பெரிய முடிவை எடுக்க உள்ளேன். அரசியல் காரணங்களுக்காக இந்த தருணத்தில் பா.ஜ.க முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று ராஜினாமா செய்கிறேன்.
மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எப்போதும் மதிப்புமிக்க ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஆசீர்வாதங்களையும் அளித்த எனது சுரு மக்களவை குடும்பத்திற்கு சிறப்பு நன்றி” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராகுல் கஸ்வான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் இன்று (11-03-24) காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தொடர்ந்து பா.ஜ.க எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.