காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை கடந்த புதன் அன்று ராகுல் துவங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து இந்த யாத்திரையை தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. நேற்று மூன்றாவது பயணத்தில் முலகமூடு பகுதியில் உள்ள பள்ளியில் நிறைவு செய்தார். அந்த வகையில் இன்று நான்காவது நாள் பயணத்தை துவங்கினார். இன்றுடன் தமிழகத்தில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முடிவுக்கு வரும் நிலையில் இன்று மாலை கேரளா மாநிலத்தை அடைகிறார்.
இந்நிலையில் பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் ராகுல் காந்தி அணிந்துள்ள டி ஷர்டின் விலை 45 ஆயிரம் என பதிவிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில் கூடிய கூட்டத்தை பார்த்து பயந்து விட்டீர்களா? இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மையை பற்றியும் பணவீக்கத்தை பற்றியும் பேசுங்கள். அதை விடுத்து துணிகளை பற்றி பேசினால் மோடிஜியின் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான உடையும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடியும் பேச்சு பொருளாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
ராகுல் காந்தியின் கேரளா நடைபயணத்தை குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள பாஜக மாநில தலைவர் சுசீந்திரன், "20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் 20 நாட்கள் நடைபயணமும்; 80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்திரபிரதேசத்தில் 2 நாட்கள் நடைபயணம் நடைபெறுவது ஆச்சர்யம்." எனக் கூறியுள்ளார்.