காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பா.ஜ.க. ஆட்சியில் தான் சீனப் பொருட்களின் ஏற்றுமதி அதிகளவில் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இந்திய, சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனா மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிரான குரல்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சீனாவிற்கு வர்த்தக ரீதியாகப் பதிலடி தரும் வகையில் சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இதனை விமர்சிக்கும் விதமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் சீன இறக்குமதியின் அளவையும், பா.ஜ.க. ஆட்சியில் சீன இறக்குமதி அளவையும் ஒப்பிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வரைபடத்தில், 2008 முதல் 2014 வரை, சீன இறக்குமதி 14 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளதும், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின்போது அது 18 சதவீதமாக உயர்ந்ததும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பதிவில், "பா.ஜ.க. சொல்வது- மேக் இன் இந்தியா, பா.ஜ.க. செய்வது- சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது" எனத் தெரிவித்துள்ளார்.