காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பிறகு பாஜக எம்.பிக்களை கட்டிபிடிக்கட்டும் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
அதேபோல் டெல்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த நிகழ்வை சுட்டிகாட்டி பேசிய ராகுல்காந்தி,
நான் கட்டிபிடிப்பேன் என நினைத்து என்னை பார்த்ததும் பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி செல்கின்றனர். பிரதமர் மோடியையும், பாஜகவையும் காங்கிரஸ் எதிர்க்கும் ஆனால் வெறுக்காது. வெறுப்புடன் இருக்கக்கூடாது என்று மதம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.என கூறினார்.
ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டியணைத்ததற்கும் தான் பாஜக எம்.பிக்களை கட்டி பிடித்து விடுவேன் என பயப்படுகிறார்கள் என்ற கருத்திற்கு பாஜக எம்.பிக்கள் பல எதிர் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்து கொண்டு பிறகு எங்களை கட்டிபிடிக்கலாம் என்றும், ராகுல்காந்தியால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவரது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள். ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை எனவும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.