நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 102 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி அன்று 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், மே 13ஆ தேதி அன்று நான்காம் கட்டமாக தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள பிரதமர் மோடி, நேற்று (08-05-24) தெலுங்கானாவின் கரீம்நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பானி மற்றும் அதானியை தவறாக பயன்படுத்துவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் எடுத்தார்கள் என்பதை அவர் அறிவிக்க வேண்டும்? ஒப்பந்தம் இருந்ததா? கறுப்புப் பணம் எவ்வளவு எடுக்கப்பட்டது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா? உங்களுக்குள் இருக்கும் டீலிங் என்ன? ஒரே இரவில் அம்பானி-அதானியை அசிங்கப்படுத்துவதை ஏன் நிறுத்தினீர்கள்? நிச்சயமாக ஏதோ தவறு இருக்கிறது. இதை நாட்டு மக்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்” என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் இளைஞர்களே! இந்திய அரசாங்கம் ஜூன் 4 ஆம் தேதி அமைக்கப் போகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பைத் தொடங்குவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.
நரேந்திர மோடியின் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாந்துவிடாதீர்கள். உங்கள் பிரச்சினைகளில் உறுதியாக இருங்கள். இந்தியா சொல்வதைக் கேளுங்கள், வேலையைத் தேர்ந்தெடுங்கள், வெறுப்பு அல்ல” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது, “மோடி ஜி, நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்களா? பொதுவாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் அதானி மற்றும் அம்பானி பற்றி பேசுவீர்கள். ஆனால், முதல் முறையாக அதானி மற்றும் அம்பானி பற்றி பொதுவில் பேசுகிறீர்கள். டெம்போவில் பணம் தருகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இது உங்கள் தனிப்பட்ட அனுபவமா? ஒரு காரியம் செய்யுங்கள். சிபிஐ, அமலாக்கத்துறையை அவர்களிடம் அனுப்பி விரிவான விசாரணை நடத்துங்கள், பயப்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.