புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் பிரகாஷ்(25). இவர் மேட்டுப்பாளையம் பான்லே பூத் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று காலை பிரகாஷ் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, 4 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் பிரகாஷை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக அமர்த்தியுள்ளனர். அப்போது, தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி, கடத்திச் சென்றுள்ளது அந்த கும்பல். இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மீட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதையடுத்து (வடக்கு) காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்(பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர், பெட்ரோல் பங்க் மேலாளரிடம் புகாரை பெற்று 364 பிரிவின் கீழ் (கொலை செய்யும் நோக்கில் கடத்தல்) வழக்குப் பதிந்த போலீசார் அருகிலுள்ள வில்லியனூர் மற்றும் கோரிமேடு காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷை மீட்க விடிய விடிய போலீசாரும், ஜெயப்பிரகாஷின் உறவினர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஊசுட்டேரியை ஒட்டிய பொறையூர் ரோட்டிலுள்ள காலி மனையில் சேற்றில் முக்கி, தலையில் கல்லைப் போட்டு ஜெயப்பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதையறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஜெயப்பிரகாஷுக்கும், சண்முகாபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன்(25) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு, அங்குள்ள சாராயக் கடையில் பிரச்சனை ஏற்பட்டு, மோதலில் முடிந்ததும், அதனைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது செல்ஃபோனில் மிரட்டல் விடுத்துப் பேசி வந்ததும் தெரியவந்தது. மேலும், கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷ் பணியாற்றிய பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
அதனைத் தொடர்ந்து சபரிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் டெம்போ ராஜா(24), டெம்போ ராஜாவின் உறவினரான மார்த்தான்(23), முத்தியால்பேட்டை எலி கார்த்திக்(26) ஆகியோரை போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதனிடையே ஜெயப்பிரகாஷின் சடலம் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அஜித் என்பவரை எதிர்த்தரப்பு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்தக் கொலை நடைபெற்று இருக்குமா என்று காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.