- தெ.சு.கவுதமன்
இன்றைய தினம் (ஏப்ரல் 13, 2023) காங்கிரஸ் தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்களும் சந்தித்துப் பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது! 2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு பா.ஜ.க.வை எதிர்கொள்வதில் இணக்கமான சூழல் வரவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஈகோ இருக்கிறது. பிரதமர் பதவி மீது எந்த ஆசையுமில்லாமல், 'பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்... அதற்கான கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும்' என்று தமிழ்நாடு முதல்வர் எழுப்பும் குரலுக்கு, மற்ற தலைவர்களிடமிருந்து சரியான வரவேற்பு இல்லை. இப்படியாகத்தான் எதிர்க்கட்சிகள் சிதறு தேங்காயாக இருப்பதால், பா.ஜ.க.வின் வெற்றி இம்முறையும் எளிதாகக் கிடைக்குமென்றே தெரிந்தது.
இந்த நிலவரத்தை மாற்றும் முனைப்போடு, இம்முறை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார். முதலில் தங்களோடு ஓரளவு ஒத்த சிந்தனையோடிருக்கும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். அதன் காரணமாக இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சல்மான் குர்ஷித், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேரங்களைத் தாண்டி பா.ஜ.க.வுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்து மனந்திறந்து பேசினார்கள்.
பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை விரிவுபடுத்துவதை கூடுமானவரை சாத்தியப்படுத்திவிட்டால் அதன்பின்னர் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டுமென்றும், மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் மோசமான செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வீழ்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றும் நம்பிக்கையோடு பல்வேறு வகை ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
கூட்டம் நேர்மறை உணர்வுகளோடு முடிந்த கையோடு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, "இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வரவுள்ள தேர்தலை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு சந்தித்துப் பேசியுள்ளோம்" என்று தெரிவித்தார். ராகுல் காந்தி கூறுகையில், "நாங்கள் இங்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். இக்கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒற்றுமையுடன் வரும் தேர்தலை எதிர்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம்" என்று அறிவித்தார்.
கூட்டம் முடிவடைந்ததும் சூட்டோடு சூடாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் சந்தித்துப் பேசினார்கள். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளனர். நாங்களும் இவர்களோடு இணைந்து செயல்படவுள்ளோம்" என்று தெரிவித்தார். இதன்மூலம் இம்முறை எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பு நம்பிக்கைக்குரிய திசையில் பயணிப்பதாகத் தெரிகிறது. இது பா.ஜ.க. தலைமைக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.