காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்டமான பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ என பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார் ராகுல் காந்தி. இந்த நடைப்பயணம், மார்ச் 20 வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது.
இந்தப் பயணத்தில் இன்று (31ம் தேதி) பீகார் மாநிலத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்கிறார். இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள மால்டா மாவட்டத்திற்கு இன்று காலை ராகுலின் கார் சென்றபோது, மர்மநபர்கள் ராகுல் காந்தியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் பரவியது. மேலும், அந்தத் தாக்குதலில் ராகுல் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது எனவும் தகவல்கள் பரவின.
முன்னதாக அசாம் மாநிலத்தில் இருந்து ராகுல் காந்தி பீகார் செல்ல மேற்கு வங்க மாநிலத்தை கடந்து சென்றார். அப்போது, இ.ந்.தி.யா. கூட்டணியில் இருந்து வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தனித்து போட்டியிடும்’ என அறிவித்தார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, ‘ராகுல் காந்தி என் மாநிலம் வழியாக செல்கிறார் ஆனால், எனக்கு அது தொடர்பாக எந்த ஒரு அழைப்பும் இல்லை’ என தெரிவித்திருந்தார். இது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், தற்போது மீண்டும் பீகாரில் மீண்டும் மேற்கு வங்கம் வரும் ராகுல் காந்தி இரு மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள மால்டா மாவட்டத்திற்கு வந்தபோது தான் கார் கண்ணாடி உடைந்துள்ளது. இதனால், அங்கு சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுலை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் ராகுலை சந்திப்பதற்காக, திடீரென அவரின் கார் முன் வந்தார். இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பாதுகாப்பு வட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீதி கேட்டு போராடி வருகிறார். பொதுமக்கள் அவர்களுடன் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.