நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார்.
14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவைக் கடந்த 17ஆம் தேதி அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி கடந்த 18ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய அந்த கடிதத்தில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு உங்களை சந்தித்து உங்கள் ஆதரவை கேட்டு வந்தேன். நான் உங்களுக்கு அந்நியனாக இருந்தாலும், நீங்கள் என்னை நம்பினீர்கள். அளவற்ற அன்புடனும் பாசத்துடனும் என்னைத் தழுவிக் கொண்டீர்கள். நீங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.
நாளுக்கு நாள் நான் அவமானப்படும் போது, உங்களுடைய நிபந்தனையற்ற அன்பு என்னைப் பாதுகாத்தது. நீங்கள் தான் என்னுடைய அடைக்கலம், என் வீடு, என் குடும்பம். நீங்கள் என்னைச் சந்தேகித்ததாக நான் ஒரு கணம் கூட உணரவில்லை. எனக்காக நீங்கள் செய்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தேவைப்படும் போது, நீங்கள் கொடுத்த அன்பு எனக்குப் பாதுகாப்பாக இருந்தது. நீங்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதி. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் எப்போதும் இருப்பேன்.
ஊடகத்தின் முன் நின்று எனது முடிவைச் சொன்னபோது என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்களைப் பாதுகாக்க எனது சகோதரி பிரியங்கா காந்தி இருப்பார் என்பதால் ஆறுதல் அடைகிறேன். நீங்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தால், அவர் உங்கள் எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.