ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (30-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யப் போகிறோம். பிரதமர் ஜவான்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார். ஜவான்களை மீண்டும் ராணுவ வீரர்களாக மாற்றுவோம்.
அமலாக்கத்துறை என்னிடம் 50 மணிநேரம் கேள்வி கேட்டது. பா.ஜ.க எனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்தது. எனது அதிகாரப்பூர்வ வீட்டையும் பறித்தது. உண்மையில் நவீன் பட்நாயக், பா.ஜ.கவுக்கு எதிராக போராடுகிறார் என்றால், ஏன் அப்படி வழக்கு எதுவும் இல்லை. பா.ஜ.க மற்றும் பி.ஜே.டி ஆகிய இரு கட்சிகளும் கோடிஸ்வரர்களுக்காக வேலை செய்கின்றன, ஏழை மக்களுக்காக அல்ல. இங்கே அரசு, பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியனால் நடத்தப்படுகிறது, முதல்வரால் அல்ல. ஒடிசாவின் செல்வம் பிஜேடி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளாலும் சூறையாடப்படுகிறது.
தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க இடையே கூட்டணி இருந்தது. காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் எதிராகப் போராடி அவர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இன்று தென் மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கிறார்கள். அதை ஒடிசாவிலும் நாங்கள் பிரதிபலிக்கப் போகிறோம். நாங்கள் பிஜேடி-பாஜக கூட்டணியை அகற்ற விரும்புகிறோம். ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று அதன் தலைவர் ஒருவர் கூறியதால், ஒடிசாவின் ஒவ்வொரு நபரையும் பாஜக அவமதித்துள்ளது” என்று கூறினார்.