கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாஸ்கர் வெலிங்கர் கூறிய கருத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்பியவர்களில் முக்கியமானவர் புனித பிரான்சிஸ் சேவியர். ஸ்பெயினைச் சேர்ந்த இவரின் உடல், கோவாவில் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல், அடுத்த மாதம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாஸ்கர் வெலிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது, “கிறிஸ்த்துவத்தைப் பரப்புவதற்கு புனித பிரான்சிஸ் சேவியரின் பங்களிப்புகளைப் பற்றி வரலாறு பேசும் அதே வேளையில், கோவாவில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர் பலருக்கு பயங்கர ஆட்சியை உருவாக்கியது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் என நம்பப்படும் உடலின் அடையாளத்தை சரிபார்க்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும்” என்று சர்ச்சையாக பேசியிருந்தார். புனித பிரான்சிஸ் சேவியர் குறித்து சர்ச்சையாக பேசியதற்காக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாஸ்கர் வெலிங்கரை கைது செய்யக் கோரி, கோவாவில் கிறிஸ்துவ சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் வெலியங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோவாவின் ஈர்ப்பு, அதன் இயற்கை அழகு, மாறுபட்ட மற்றும் இணக்கமான மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் உள்ளது. ஆனால், துர்திர்ஷ்டவசமாக அங்கு நடைபெறும் பா.ஜ.க ஆட்சியில், இந்த நல்லிணக்கம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பா.ஜ.க வேண்டுமென்றே வகுப்புவாதத்தை தூண்டி மதநல்லிணக்கத்தை குலைக்க முயற்சி செய்கிறது.
இந்தியா முழுவதும், உயர் மட்டங்களின் ஆதரவுடன் சங்பரிவார்கள் இதேபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மக்களைப் பிளவுபடுத்தும் அதே வேளையில் கோவாவின் இயற்கை மற்றும் சமூக பாரம்பரியத்தின் மீதான தாக்குதலையும் பா.ஜ.க நடத்தி வருகிறது. பா.ஜ.க.வின் முயற்சிகள் ஒருபோதும் கைவிடப்படாது. கோவா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும், பா.ஜ.கவின் பிளவுப்படுத்தும் கொள்கைக்கு எதிராக ஓரணியில் திரள்வார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.