மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (25.10.2021) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,
“பெட்ரோல் மற்றும் டீசலைவிட பசுமை ஹைட்ரஜன் சிறந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, எத்தனால் மற்றும் பிற தூய்மையான, உள்நாட்டு எரிபொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுமாறு முதலீட்டாளர்களை வலியுறுத்துகிறேன். போக்குவரத்துத் துறை பெரிய மாற்றத்தை சந்தித்துவருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியைச் சார்ந்திருக்காமல், எரிபொருளை ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டை உருவாக்க விரும்புகிறோம்.
இந்தியா தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்காக கிட்டத்தட்ட ரூ. 8 லட்சம் கோடி செலவழிக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 25 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம். பெட்ரோல் - டீசல் இறக்குமதி மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகளையும் நாம் பணக்காரர்களாக்குகிறோம். பெட்ரோல் - டீசல் இறக்குமதியைக் குறைப்பது நாடு சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும்.
அலுமினியம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இந்தியாவில் ஏராளமாக இருந்தும், இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் முக்கியமானது. சுற்றுச்சூழலையும் சூழலியலையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நிறுத்தப்படக்கூடாது.
மாநில அரசுகள் நடத்தும் மின் விநியோக நிறுவனங்களின் நிலை மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதால், இந்தியாவிற்கு அதிக மின்சாரம் தேவைப்படலாம். எனவே, அநேகமாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தட்டுப்பாடு பிரச்சனையைச் சந்திக்க நேரிடும்.”
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.