நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்ற பட்சத்தில், அவர் ஏற்கெனவே பதவி வகித்த வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதனால், வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அந்த தொகுதிக்கு வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் பிரியங்கா காந்தி போட்டியிட இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட இருக்கிறார். இதன் மூலம், தேர்தல் அரசியலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா காந்தி நாளை (23-10-24) வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதையொட்டி, கல்பெட்டாவில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை வாகன அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தந்து எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர், அவர்களுக்கு என் சகோதரியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர் வயநாட்டின் தேவைகளுக்கு ஆர்வமுள்ளவராகவும், நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, நாளை (23ஆம் தேதி) எங்களுடன் சேருங்கள். ஒன்றாக, வயநாடு தொடர்ந்து அன்புடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.