தெற்கு டெல்லியின் ஓல்டு நங்கல் தகன மயானத்திற்கு அருகே பெற்றோருடன் வசித்துவந்த ஒன்பது வயது சிறுமி, தகன மயான பகுதியில் குடிதண்ணீர் எடுக்க மாலை 5.30 மணிக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில், 6 மணியளவில் பூசாரியும் மயான ஊழியர்கள் மூன்று பேரும் சிறுமியின் தாயை அழைத்து சிறுமியின் உடலைக் காட்டி, குளிரூட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு அந்த சிறுமியின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.
பூசாரியும் மயான ஊழியர்களும், சிறுமி இறந்ததாக காவல்துறையை நாடினால், பிரேதப் பரிசோதனையின்போது மருத்துவர்கள் சிறுமியின் உடல் உறுப்புகளைத் திருடிவிடுவார்கள் எனக் கூறி, சிறுமியின் தாயை சம்மதிக்க வைத்து உடலை எரித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை பூசாரியும் அவருடன் இருந்த மூவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலை தங்கள் ஒப்புதலின்றி எரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிவருகின்றனர். சிறுமிக்கு நீதி கேட்டு ஓல்டு நங்கல் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (04.08.2021), உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சிறுமியின் குடும்பத்துடன் பேசினேன். அவர்களுக்கு நீதிதான் தேவை, வேறு எதுவும் தேவையில்லை. தங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதை செய்வோம். நான் உங்களுடன் நிற்கிறேன் என அவர்களிடம் கூறினேன். நீதி கிடைக்கும்வரை ராகுல் காந்தி அவர்களுடன் நிற்பான்" என தெரிவித்தார்.
அதன்பிறகு, சிறுமியின் பெற்றோரைச் சந்தித்தது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "பெற்றோரின் கண்ணீர் ஓரே ஒரு விஷயத்தைத்தான் சொல்கிறது. அவர்களது மகள், இந்த நாட்டின் மகள், நீதியைப் பெற தகுதியானவர். நீதிக்கான பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.