இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தையும் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி, மாநிலங்களவை மற்றும் மக்களவையிலுள்ள எதிர்க்கட்சி அவைத்தலைவர்களின் கூட்டம் ஒன்றிற்கு இன்று (03.08.2021) அழைப்பு விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐ.யு.எம்.எல், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (எம்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டு கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், லோக்தந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆம் ஆத்மி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "என்னுடைய பார்வையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் ஒன்றிணைந்துள்ளோம். இந்தக் (எதிர்க்கட்சிகளுடைய) குரல் எவ்வளவு ஒன்றிணைகிறதோ, அந்தளவிற்கு சக்தி வாய்ந்ததாக மாறும். இந்தக் குரலை அடக்குவது பாஜக - ஆர்.எஸ்.எஸ்க்கு கடினமாகும்" என தெரிவித்தார்.
#WATCH | Delhi: Congress leader Rahul Gandhi and other Opposition leaders ride bicycles to the Parliament, after the conclusion of their breakfast meeting. pic.twitter.com/5VF6ZJkKCN
— ANI (@ANI) August 3, 2021
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றனர்.