அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம், அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்த விவாதங்களை மத்திய அரசு தவிர்க்கிறது என்று குற்றம்சாட்டி நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று (11-12-24) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி, நாடாளுமன்றத்திற்கு வரும் பா.ஜ.க எம்.பிக்களுக்கு ரோஜா பூக்கள் மற்றும் தேசியக் கொடிகளை வழங்கினர். அப்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்காக காரில் இருந்து இறங்கி வந்தார். அங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ரோஜா பூவையும், தேசியக் கொடியையும் மகிழ்ச்சியோடு வழங்கினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்கும் அதே வேளையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும், பணக்காரர் பரோபகாரர் ஜார்ஜ் சொரஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாகவும், சோரோஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.