Skip to main content

“பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் இல்லை” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Rahul Gandhi comments on Prime Minister Modi is not an OBC by birth

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தை கடந்து தற்போது ஒடிசா மாநிலத்திற்கு நுழைந்துள்ளது. ஒடிசா மாநிலம், சுந்தர்கார் நகருக்கு வந்த ராகுல் காந்தி, அங்குள்ள பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி பொது பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொய் சொல்லி வருகிறார். அவர் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். அவர் தெலி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். 

கடந்த 2000 ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்த பா.ஜ.க ஆட்சியின் போது தான் தெலி வகுப்பை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. இதன்படி, மோடி பிறப்பால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிகிறது. அதனால், தனது வாழ்நாள் முழுவதும் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட போவதில்லை. பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருடன் கைகுலுக்கக் கூட மாட்டார். ஆனால், பெரும் பணக்காரர்களை கண்டால் அவர் அரவணைத்துக் கொள்வார்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்