பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரஃபேல் போா் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாவலரே (பிரதமா் மோடி) திருடன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியிருந்தாா். இவ்வாறு கூறியதற்காக, ராகுல் மீது பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதனையடுத்து ராகுல் காந்தி தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்த பிறகும், மீனாட்சி லேகி வழக்கை திரும்ப பெறவில்லை.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், " ராகுல் காந்தி இனிவரும் காலத்தில் நீதிமன்றத்தின் விஷயங்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும் என எச்சரிக்கை செய்கிறோம். மேலும் ராகுல் காந்தி மீதான இந்த கிரிமினல் வழக்கை இத்துடன் முடித்து வைக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.