மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலம் குவாஹாத்தியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "வடகிழக்கு மாநில மக்கள் கடுமையாக எதிர்த்த இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். இந்த மசோதாவை எந்த வகையிலும் நிறைவேற விட மாட்டோம். மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை கூலி நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்படும். அதனையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டு வெளியிலம திண்டாட்டம் குறைக்கப்படும்" என தெரிவித்தார்.