மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து, ஆறாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர், ஜூன் 1ஆம் தேதி ஏழாம் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (24-05-24) இளைஞர்களுடன் லாரியில் பயணித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பயணத்தின் போது, ராகுல் காந்தி இளைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேசபக்தியின் டெம்போவில் சவாரி செய்யும் போது இளைஞர்கள் படும் துன்பங்களை மிக நெருக்கமாக அறிந்தேன். நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு நரேந்திர மோடி துரோகம் இழைக்கிறார். அவர்கள் மீதும் அக்னிபத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளார். இந்த துணிச்சலான இளைஞர்களுக்கு இந்தியா கூட்டணி அரசில் நீதி கிடைக்கும். அவர்களின் கனவுகளை சிதைக்க விடமாட்டோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.