
கோவையில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் அடிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலை மீது வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் காவிச் சாயத்தை வீசிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பு நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சிலை அவமதிப்பு விவகாரம் பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்துவரும் நிலையில், இதுகுறித்து தமிழில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி, "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.