Skip to main content

ராகுல் காந்தி குறித்து நர்ஸ் அதிரடி அறிவிப்பு!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோர் ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமையை காரணம் காட்டி அவரை தேர்தலில் இருந்து போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்ரியில் கல்லூர் பகுதியைச்  சேர்ந்த ராஜம்மா வவாதில் என்ற 72 வயது ஓய்வு பெற்ற செவிலியர் ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்தார் என்பதற்கு தான் சாட்சி என்று தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராஜம்மா பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 

nurse



ராகுல் காந்தி கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமலி ஹாஸ்பிடலில் பிறந்தார். நான் அப்போது ராகுல் காந்தி பிறந்த மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியில் இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், சோனியா காந்திக்கு ஆண் குழந்தை, அதாவது ராகுல் காந்தி பிறந்தவுடன் அந்த குழந்தையை கையில் ஏந்திய செவிலியர்களில் நானும் ஒருவர். அப்போது அவர் மிகவும் அழகாக இருந்தார். ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நான்தான் சாட்சி. இந்திரா காந்தியின் பேரனை நான் இங்கு பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 49 வயதாகும் 'கியூட்பேபி' காங்கிரஸ் தலைவராகவும், வயநாட்டில் போட்டியிடுவதையும் நினைத்து மகிழ்கிறேன்.

சோனியா காந்தி பிரசவத்துக்கு அழைத்துச் சென்றபோது, ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோர் மருத்துவமனையின் பிரசவ அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர். இந்த கதையை நான் என் குடும்பத்தாரிடம் பல முறை கூறி இருக்கிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் எழுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தியின் குடியுரிமை அடையாளத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் குடியுரிமை குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் புகார் ஆதாரமற்றது.

ராகுல் காந்தி டெல்லியில் பிறந்தார் என்பதற்கான அனைத்து சான்றுகளும் மருத்துவமனையில் இருக்கும். ராகுல் காந்தி அடுத்த முறை வயநாட்டுக்கு வரும்போது நான் அவரைச் சந்திக்க காத்திருக்கிறேன். இவ்வாறு ராஜம்மா தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்