ரூ.4000 கோடி ஊழலில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய ஆந்திராவின் கைத்தறி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் குஜ்ஜல சீனிவாசுலு இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், மூன்று கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, ரூ.1 கோடி பணம் முதலியன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆந்திராவில் சந்திரபாபு ஆட்சியின்போது கைத்தறி கூட்டுறவுச் சங்க தலைவராக இருந்த குஜ்ஜல சீனிவாசுலு, அந்த சங்கத்தின் மூலம் ரூ.4000 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை நெசவாளர் கூட்டுறவுச் சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் அரசுக்கு புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, சி.ஐ.டி. அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காஜிபேட்டை பகுதியில் உள்ள குஜ்ஜல சீனிவாசுலு இல்லத்தில் சி.ஐ.டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, ரூ.1 கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.