கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கனமழை பொழிந்து வரும் நிலையில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அதேபோல் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் மக்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கேரள அரசு சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாவக்காடு கடற்கரைப் பகுதியில் ராட்சத அலைகள் சீறிப் பாய்ந்து வருவதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் கடற்கரை ஒட்டியுள்ள சில கட்டடங்கள் இடிந்து கடல் அலையால் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மதியத்திற்கு மேல் கடல் அலைகள் சீற்றம் மேலும் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழை காரணமாகக் கேரளாவில் ஆறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.