உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9:55 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 217 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 95 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-06 இடங்களிலும், காங்கிரஸ்-04 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 79 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், அகாலிதளம் 07 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 02 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாபில் காலை 8.30 நிலவரப்படி நான்கு இடத்தில் இருந்த அகாலிதளம் 07 இடங்களில் முன்னிலை என எட்டிப்பார்த்த நிலையில் 23 இடங்களில் இருந்த ஆம் ஆத்மி 79 இடங்களில் முன்னிலை என சிட்டாய் பறந்துள்ளது. பஞ்சாப்பில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 பேரவை தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளார்.
அதேவேளையில் உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.