பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகனான பூபிந்தர் சிங் ஹானி என்பவர் சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் பூபிந்தர் சிங் ஹானிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 10 கோடிக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்திருந்தது. மேலும் இந்த சோதனையின்போது பூபிந்தர் சிங் ஹானிக்கு சொந்தமான இடங்களில் இருந்து சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், மொபைல் போன்கள், 21 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம், 12 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
பிரதமரின் பஞ்சாப் வருகையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு பழிவாங்கவே அமலாக்கத்துறை பூபிந்தர் சிங் ஹானியை குறிவைத்து சோதனை நடத்தியதாக சரண்ஜித் சிங் சன்னி குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.