கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதற்கு முன்பாக கட்சித் தலைவராக 8 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வந்த ஏ.வி.சுப்பிரமணியனை நீக்கிவிட்டு கடந்த 10.07.2015 அன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நமச்சிவாயம் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் 2021ல் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் என இரண்டு பதவிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்ற ஒரு கருத்து கட்சிக்குள் நிலவியது.
அதையடுத்து தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சிப் பணிகளை தீவிரமாக ஆற்ற வேண்டி இருப்பதால் கட்சித் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டுமென மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் சஞ்சய்தத் ஆகியோரிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் முதல்வர் நாராயணசாமியையும், அமைச்சர் நமச்சிவாயத்தையும் டெல்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினர் மேலிட பார்வையாளர்கள். மேலும் நமச்சிவாயம் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். எனவே கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடி மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒப்புதல் அளித்ததன் பேரில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஏ.வி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.வி.சுப்பிரமணியன் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்தவர் ஆவார். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் ஒருமுறை அமைச்சராகவும், ஒருமுறை சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.