புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி நாளை (22/02/2021) நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவர் வழங்கினார்.
ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ள தி.மு.க.வின் வெங்கடேசன், "புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும்? சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தி.மு.க. தலைமையிடம் கூறிவிட்டேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்தேன். தி.மு.க. கட்சியிலிருந்து விலகவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆகும். இதில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். மற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், தி.மு.க எம்.எல்.ஏ. ஒருவர் என மொத்தம் ஆறு பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், நாளை (22/02/2021) கூட உள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் நாராயணசாமி கோருவாரா? அல்லது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.