Skip to main content

அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக தாய், சேய் உயிரிழப்பு.

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் 1932-ஆம் ஆண்டு அரசு பொது மருத்துவமனையுடன், மகப்பேறு மருத்துவமனை துவக்கப்பட்டது. பின்னர் 1938-ஆம் ஆண்டு முதல் தனித்தனி மருத்துவமனைகளாக செயல்பட தொடங்கியது. அப்போது மகப்பேறு மருத்துவமனையில் 76 படுக்கை வசதிகள் மட்டுமே இருந்தன.அதையடுத்து எல்லப்பிள்ளைச் சாவடியில் 700 படுக்கை வசதியுடன் கூடிய ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டது. மிகவும் கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த அரசு மருத்துவமனையை, கடந்த 2010- ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.


2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயங்க தொடங்கியது. மகப்பேறு மருத்துவத்துக்கு என தனியாக கட்டப்பட்ட இம்மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகப் பகுதியான விழுப்புரம், கடலூர் என அருகிலுள்ள மாவட்டத்தினரும் சிகிச்சைக்காக வருகின்றனர். அதேசமயம் சில மாதங்களாக தாய் சேய் உயிரிழப்பு அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

puducherry  Mother, child incident in government hospital continuously.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் கூறுகையில், "கடந்த 2011- 2012 ஆம் ஆண்டுகளில் பிரசவ எண்ணிக்கை 13,993 ஆக இருந்தது. படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைய தொடங்கி 2015-16 ல் 8,609 ஆனது. அதே நேரத்தில் நிதி ஒதுக்கீடு கடந்த 2011-ல் ரூ.25.7 கோடியாக இருந்தது. கடந்த 2016-ல் ரூ.43.5 கோடி நிதி இந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது.


புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் சூழல் ஏற்படும். அப்போது ரத்ததானத்தை மகப்பேறு மருத்துவமனையில் அளிக்க வசதியில்லை. அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் தான் சென்று வழங்க வேண்டும். அதுவும் காலையிலிருந்து மதியம் 2 மணிக்குள் தரவேண்டிய சூழலே நிலவுகிறது. இங்கு தற்போது சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது நிலவி வருகின்றது. இதற்கு காரணம் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் சரிவர வருவதில்லை,  அப்படி வந்தாலும் சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

puducherry  Mother, child incident in government hospital continuously.

கடந்த மாதம் முதல் தற்போது வரை 5 கர்ப்பிணி பெண்களும், 10- க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் போதே இறந்தது தெரிய வருகின்றது. குறிப்பாக கடந்த மாதம் 10- ஆம் தேதி கலிதீர்த்தான்குப்பம் பகுதியை சார்ந்த பாக்கியலட்சுமி என்பவர் பிரசவத்தின் போது தனது குழந்தையுடன் பலியானார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை சேலியமேட்டைச் சேர்ந்த பாரதி பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தையுடன் உயிரிழப்பு. மீண்டும் ஒரு சோக சம்பவம் அடுத்த நாளே பிரசவித்த சில மணி துளிகளிலே 3 பச்சிளம் குழந்தை என அடுத்தடுத்து உயிர்பலி கொண்டுள்ளது அரசு மருத்துவமனை. 


இதற்கு காரணம் சரியான மருந்துகள், மருத்துவர்கள் , செவிலியர் இல்லாததுதான் என்று தெரிய வந்துள்ளது. புதுச்சேரி அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மருத்துவர்கள், மருந்துகள் பற்றாக்குறையை போக்கவேண்டும் இல்லையெனில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர், "உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு தானாக முன்வந்து இழப்பீடு வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்